சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.120   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்

-
மேலாறு செஞ்சடைமேல்
வைத்தவர்தாம் விரும்பியது
நூலாறு நன்குணர்வோர்
தாம்பாடும் நோன்மையது
கோலாறு தேன்பொழியக்
கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின்
கமழ்சாறூர் கஞ்சாறூர்.

[ 1]


மேன்மை பொருந்திய கங்கை ஆற்றினைச் செஞ் சடைமேல் வைத்த பெருமான், தான் என்றும் விரும்பி எழுந்தருளி இருப்பதும், நூல்களைக் கற்று அதன்வழி ஒழுகும் நன்குணர்ந்தோராய புலவர்கள், தாங்கள் அன்பினால் சிறப்பித்துப் பாடும் சிறப்பினை உடையதுமாயதொருநகரம், மரக் கொம்பரில் கட்டிய தேன்கூடுகள் தேனை முறையாகப் பொழிந்திடக், கொழுத்த பழங்களின் சாறுகளும் ஒழுகி, ஒன்றாய்ச் சேர்ந்து, வாய்க்கால் வழி ஓடி, வயல் புகுந்து, அங்குள்ள கரும்பின் சாற்றொடு கலந்திடத் தேன் சுவையும் பழச்சுவையும் உடன் கலந்து மணம் நிறைந்து விளங்குவது கஞ்சாறூர் என்பதாகும்.

குறிப்புரை: நோன்மையது - சிறப்பினையுடையது. கோல் - மரக்கிளை. கஞ்சாறூர் - இது பொழுது ஆனதாண்டவபுரம் என வழங்கி வருகிறது. இது ஆனந்த தாண்டவபுரம் என்பதன் மரூஉவாகும். மயிலாடுதுறைக்குக் கிழக்கே அமைந்துள்ளது.

கண்ணீலக் கடைசியர்கள்
கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண்
உறைத்துமலர்க் கண்சிவக்கும்
தண்ணீர்மென் கழுநீர்க்குத்
தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த
வளவயல்கள் உளஅயல்கள்.

[ 2]


நீல மலர்போலும் கண்ணழகுடைய பெண்கள் களை எடுக்கும்பொழுது தப்பி ஒதுங்கி, புணர்ச்சி வயத்தால் சிவந் துள்ள கண்போலச் சிவந்து நிற்கும். செங்கழுநீர் மலரை, பெருத்த செஞ்சாலியின் நெற்கதிர்கள் தலைசாய்த்து வணங்கி நிற்கும். அத்தகைய மண்வளம் நிறைந்த வயல்கள், கஞ்சாறூரின் குடிமனைகள் நீங்கிய அயல் இடங்களில் எங்கும் உள்ளன.

குறிப்புரை: கடைசியர் - மருத நிலத்துப் பெண்கள். நீலமலர்கள் இயல் பிலேயே சிவந்து இருப்பினும் மண் வளத்தாலும் நீர்வளத்தாலும் மேலும் சிவப்புற்றுள்ளன. கதிர் முற்றிய நெற்பயிர் சாய்தல் இயற்கை எனி னும் அவை நீலமலர்களை வணங்கின எனக் கூறல் தற்குறிப்பேற்றமாம்.

புயல்காட்டுங் கூந்தல்சிறு
புறங்காட்டப் புனமயிலின்
இயல்காட்டி இடைஒதுங்க
இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல்காட்டும் மதிதோற்கும்
முகங்காட்டக் கண்மூரிக்
கயல்காட்டுந் தடங்கள்பல
கதிர்காட்டுந் தடம்பணைகள்.

[ 3]


மேகம் என வளர்ந்த கருங்கூந்தலைக் கடைசி யர்களின் பின்முதுகு காட்ட, கானில் உள்ள மயிலின் இயல்பினை அவர்களின் இடைகாட்ட, வயலில் காணும் பெண்கள், முயற்கறையை யுடைய நிறைநிலவின் அழகைத் தோற்கச் செய்யும் முகங்களைக் காட்ட, கொழுத்த கயல்மீன்கள் அவர்களின் கண்களைக் காட்டும் குளங்கள் பலவாக இடையிடையே அமைய, நெற்கதிர்களை நீளக் காட்டவல்ல வயல் நிலங்கள் பல கஞ்சாறூரில் உள்ளன.

குறிப்புரை: காட்ட எனும் சொல் பன்முறையும் வந்து சொல்லழகு பெற நின்றது.

சேறணிதண் பழனவயல்
செழுநெல்லின் கொழுங்கதிர்போய்
வேறருகு மிடைவேலிப்
பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலைவளைப்ப
வண்டலைதண் டலையுழவர்
தாறரியும் நெடுங்கொடுவாள்
அனையவுள தனியிடங்கள்.

[ 4]


சேற்றினையுடைய குளிர்ந்த அழகிய வயலி னின்றும் எழுந்த நெல்லின் செழுமையான கதிர் நீண்டு சென்று, அதன் அயலே வேலியாக உள்ள பசிய கமுக மரத்தின் கழுத்து வரை உராய்ந்து வளைந்து, தனக்கு மாறாக எழுந்த திண்ணிய கமுகம் குலையை வளைத்திருப்பவை, வண்டுகள் சூழ்ந்த சோலையில் வாழும் உழவர்கள், நெல்லின் தாளை அறுத்தற்கென வைத்திருக்கும் வளைந்த அரிவாளை ஒத்திருப்பனவாகும். இனைய பல இடங்கள் ஆங்காங் குள்ளன.

குறிப்புரை: உரிஞ்சி - உராய்ந்து. நெற்பயிர்கள் கமுக மரத்தை வளைத்து நிற்கும் தோற்றம் அரிவாளை ஒத்துள்ளது என்றது, வடிவு பற்றிய உவமையாம்.

பாங்குமணிப் பலவெயிலும்
சுலவெயிலும் உளமாடம்
ஞாங்கரணி துகிற்கொடியும்
நகிற்கொடியும் உளவரங்கம்
ஓங்குநிலைத் தோரணமும்
பூரணகும் பமும்உளவால்
பூங்கணைவீ தியில்அணைவோர்
புலமறுகுஞ் சிலமறுகு.

[ 5]


அருகிலுள்ள மாடங்கள், மணிகளின் ஒளியுடை யனவாயும், சூழ்ந்துள்ள மதில்களையுடையனவாயும் உள்ளன. அவற்றின் அருகிருக்கும் ஆடரங்குகள், துகிலால் ஆகிய கொடி களையும், அழகிய மார்பகங்களையுடைய பூங்கொடிகளையும் (பெண்களையும்) உடையனவாயுள்ளன. மன்மதனின் மலர்க் கணைகள், சிறந்து விளங்கும் மாட வீதியின் வழியாகச் செல்வோரின் புலன்களைத் தம் காட்சியானும் மாட்சியானும் மயங்க வைக்கும் வீதிகளில், மேலோங்கிய தோரணமுகப்புகளும், நிறை குடங்களும் உள்ளன.

குறிப்புரை: சுலவு எயில் - சூழவுள்ள மதில்கள். நகில்கொடி - மார்பகங்களையுடைய கொடிகள் (பெண்கள்). ஏகதேச உருவகம். பூங்கணை - மன்மதனின் மலர்க்கணைகள்.

Go to top
மனைசாலும் நிலையறத்தின்
வழிவந்த வளம்பெருகும்
வினைசாலும் உழவுதொழில்
மிக்கபெருங் குடிதுவன்றிப்
புனைசாயல் மயிலனையார்
நடம்புரியப் புகல்முழவங்
கனைசாறு மிடைவீதிக்
கஞ்சாறு விளங்கியதால்.

[ 6]


நிறைவான மனையறத்தை வழிவழியாக ஏற்று வளம் பெருக வாழும் உழவர்கள் தழைத்து ஓங்கி வாழ்ந்திருப்பதும், அழகு பொருந்திய சாயலையுடைய பெண்கள் நடம் செய்ய, அதற்கு இசைய முழங்கும் முழவின் மிகு ஓசை பரந்திருக்கும் வீதிகளை யுடையதும் ஆனது கஞ்சாறூர் எனும் பதியாம்.

குறிப்புரை: ஆல் - அசை.

அப்பதியிற் குலப்பதியாய்
அரசர்சே னாபதியாம்
செப்பவருங் குடிவிளங்கத்
திருஅவதா ரஞ்செய்தார்
மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார்
விழுமியவே ளாண்குடிமை
வைப்பனைய மேன்மையினார்
மானக்கஞ் சாறனார்.

[ 7]


அத்தகைய கஞ்சாறூர் எனும் பதியில், வேளாண் குலத்தலைவராயும், அரசனுடைய தானைத் தலைவராய் விளங்கு தற்கு என்றும் வழிவழி உரிமையுடையவராயும் உள்ளார் ஒருவர் தோன்றினார். அவர் இவ்வுலகில் உண்மைப் பொருள் எது என்பதை அறிந்து உணர்ந்தவர். மிகவும் விழுமிய வேளாண் குடிக்குச் சேம வைப்பாக விளங்குபவர். அவர் மானக்கஞ்சாறனார் எனும் பெயரினர்.

குறிப்புரை:

பணிவுடைய வடிவுடையார்
பணியினொடும் பனிமதியின்
அணிவுடைய சடைமுடியார்க்
காளாகும் பதம்பெற்ற
தணிவில்பெரும் பேறுடையார்
தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே
ஏவல்செயுந் தொழில்பூண்டார்.

[ 8]


அவர், தாழ்வெனும் தன்மையோடு வாழ்தலை வெளிப்படுத்தும் வடிவு உடையவர். பாம்பினொடு குளிர்ந்த இளம் பிறையை அணிந்த சடையுடைய பெருமானுக்கு முழுமையாக அடிமையாகும் பேறுபெற்று, அப்பேற்றில் என்றும் குன்றாது நிற்கும் திறத்தினர். தம் பெருமானின் திருவடிகளைச் சார்ந்து நிற்கும் துணிவுடைய தொண்டர்கட்கே ஏவல் செய்யும் தொழிலை மேற் கொண்டவர்.

குறிப்புரை:

மாறில்பெருஞ் செல்வத்தின்
வளம்பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடைக்கற்றை
அந்தணர்தம் அடியாராம்
ஈறில்பெருந் திருவுடையார்
உடையாரென் றியாவையுநேர்
கூறுவதன் முன்னவர்தம்
குறிப்பறிந்து கொடுத்துள்ளார்.

[ 9]


ஒப்பற்ற பெருஞ் செல்வத்தின் வரும் வளங்கள் யாவும் பெருகிவர, அப்பொருள்கள் எல்லாவற்றையும், கங்கை நிலவிய சடையையுடைய அறவாழி அந்தணனாம் சிவபெருமானின் அடியவராக விளங்கும் முடிவிலாத பெருந்திரு உடையவர்களே, தம்மை அடிமைகொள்ளுதற்குரியராவர் என்று கருதி, அவ்வடிய வர்கள் நேராக எதனையும் வேண்டும் முன்பே, அவர்களின் குறிப் பறிந்து கொடுத்து வரும் பாங்கினர்.

குறிப்புரை:

விரிகடல்சூழ் மண்ணுலகில்
விளக்கியஇத் தன்மையராம்
பெரியவர்க்கு முன்சிலநாள்
பிள்ளைப்பே றின்மையினால்
அரியறியா மலர்க்கழல்கள்
அறியாமை யறியாதார்
வருமகவு பெறற்பொருட்டு
மனத்தருளால் வழுத்தினார்.

[ 10]


விரிந்த கடல் சூழ்ந்த இம்மண்ணுலகில் விளங்கிய இத்தன்மை உடையராய மானக்கஞ்சாறர், வாழ்நாளில் முன் சில நாள்களாகப் பிள்ளைப்பேறு இல்லாமையால், திருமாலும் அறிய இயலாத பெருமானுடைய மலரடிகளைத் தான் அறியாமல் இருத்தலை அறியாராய தமக்கு, ஒரு குழந்தை வேண்டும் எனத் தம் மனத்தில் பெருமானை வழுத்தினார்.

குறிப்புரை: அறியாமை அறியாதார் எனவே என்றும் அறிந்தவராய் வாழ்ந்தார் என்பதாம்.

Go to top
குழைக்கலையும் வடிகாதில்
கூத்தனார் அருளாலே
மழைக்குதவும் பெருங்கற்பின்
மனைக்கிழத்தி யார்தம்பால்
இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த
இப்பிறவிக் கொடுஞ்சூழல்
பிழைக்குநெறி தமக்குதவப்
பெண்கொடியைப் பெற்றெடுத்தார்.

[ 11]


குழையை ஏற்று அசைகின்ற அழகிய காது களையுடைய கூத்தப் பெருமானின் திருவருளால், மழை வேண்டும் பொழுது, அதனை உடன் உதவுதற்குரிய பெருங் கற்பினையுடைய தம் மனைவியார் திருவயிற்றில், ஒழிவின்றிப் பெருகிவரும் வினைப் பயன்களால் வரும் பிறவி என்னும் கொடிய சுழற்சியினின்றும் தப்பிப் பிழைக்கின்ற நல்நெறியினைத் தமக்கு உதவ வல்லதொரு பூங்கொடி போலும் சாயலுடைய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
குறிப்புரை: குழைக்கு அலையும் - குழைகளால் அசைகின்ற. வடிகாது-வளைந்தகாது. பிழைக்கு நெறி - உயிர் இப்பிறவியினின்றும் பிழைத்தற்குரிய நெறி: வீட்டு நெறி. இதனால் ஆண்மகவினாலன்றி வீடுபேறு எய்தலரிது எனும் கருத்து மறுக்கப்பட்டமை அறியலாம். 'மழைக்குதவு பெருங்கற்பு' எனும் தொடர், 'பெய்யெனப் பெய்யும் மழை' (குறள் 55) எனவரும் திருக்குறட் கருத்தை உட்கொண்டதாம். 'கருமழை தரவேண்டில் தருகிற்கும் பெருமையளே'(கலித். குறிஞ். 3) 'வான்தரு கற்பின்'(மணிமேகலை சிறைசெய்-53) எனப் பிறாண்டும் இவ்வுண்மை கூறப்படுதல் காணலாம். இவற்றிற்கெல்லாம் மாறாக இத்திருக்குறட்கு இக்காலத்தார் பிறவாறெல்லாம் உரை விரிப்பர். அஃது ஆசிரியர் திருவள்ளுவர் கருத்திற்கு மாறானதாம்.

பிறந்தபெரு மகிழ்ச்சியினால்
பெருமூதூர் களிசிறப்பச்
சிறந்தநிறை மங்கலதூ
ரியம்முழங்கத் தேவர்பிரான்
அறந்தலைநின் றவர்க்கெல்லாம்
அளவில்வளத் தருள்பெருக்கிப்
புறந்தருவார் போற்றிசைப்பப்
பொற்கொடியை வளர்க்கின்றார்.

[ 12]


தமக்கொரு பெண் குழந்தை பிறந்த பெரு மகிழ்ச்சி யினால், பெரிய அம் முதிய ஊராய கஞ்சாறூர் மக்கள் களிப்புடன் சிறக்க, சிறப்புடன் நிறைகின்ற மங்கல இயங்கள் முழங்கிட,தேவர் தலைவனாய பெருமானின் தலையாய தொண்டினில் நின்ற அடியவர் களுக்கெல்லாம் அளவில்லாத கொடைகளை அருள் சிறக்கக் கொடுத்து, அக்குழந்தையைப் போற்றிப் பாதுகாத்து வரும் தாதியர் வாழ்த்தெடுப்பப், பொன்னின் கொடி போன்ற அக்குழந்தையை வளர்த்து வருவாராயினர்.
குறிப்புரை:

காப்பணியும் இளங்குழவிப்
பதம்நீங்கிக் கமழ்சுரும்பின்
பூப்பயிலும் சுருட்குழலும்
பொலங்குழையும் உடன்தாழ
யாப்புறுமென் சிறுமணிமே
கலையணிசிற் றாடையுடன்
கோப்பமைகிண் கிணியசையக்
குறுந்தளிர்மெல் லடியொதுங்கி.

[ 13]


காப்பு அணிதற்குரிய இளம் பருவத்தைக் கடந்து, நறுமணம்மிக்க வண்டுகள் மொய்த்திடும் பூக்களை முடிக்கும் சுருண்ட கூந்தலும், அழகிய பொன்னின் தோடும் உடன் தாழ்ந்து விளங்கிட, மெல்லிய சதங்கைகள் கட்டிய சிறிய மேகலை அணிந்த சிற்றாடை யுடன் கோக்கப்பட்ட மணிகளையுடைய கிண்கிணிகள் அசைந்திட, குறுகிய தளிர்போலும் மென்மையான அடிகளால் ஒதுங்கி நடந்து.

குறிப்புரை: காப்பு குழந்தைக்குப் பிணி முதலியன வராதவாறு காத்தற்கு இறைவனை வேண்டுதல். குழந்தை பிறந்த இரண்டாந் திங்களில் இவ்வேண்டுதற்காகச் செய்தல் மரபு என்பர்.
பிள்ளைத் தமிழில் காப்புப் பருவம் என வருவதும் இம்மரபுப் பற்றியேயாம்.

புனைமலர்மென் கரங்களினால்
போற்றியதா தியர்நடுவண்
மனையகத்து மணிமுன்றில்
மணற்சிற்றில் இழைத்துமணிக்
கனைகுரல்நூ புரம்அலையக்
கழல்முதலாப் பயின்றுமுலை
நனைமுகஞ்செய் முதற்பருவம்
நண்ணினள்அப் பெண்ணமுதம்.

[ 14]


அமுதனைய அப்பெண், செங்காந்தள் மலர் போலும் அழகிய மென்மையான கைகளினால் பாதுகாத்து வளர்த்து வரும் தாதியர் நடுவுள், மனையகத்திருக்கும் மணி பதித்த முற்றத்தில், சிறு சோறாக்கிச், சிறுவீடு கட்டி விளையாடியும், ஒலித்திடும் சிலம் புகள் இசைத்தலைந்திடக் கழங்காடல் முதலிய ஆடல்களைப் பயின் றும், முலைகள் அரும்பெனத் தோன்றும் பெதும்பைப் பருவத்தினை அடைந்தாள்.
குறிப்புரை: நனை - அரும்பு. முதல் - முதன்மையான. பெண்மை தோன்றற்கு முதன்மையான பருவம் பெதும்பைப் பருவம் ஆதலின் இதனை 'முதற் பருவம்' என்றார். 'நனைமுகஞ்செய் முதற்பருவம்' என்ற பின், இது பேதைப் பருவமாகாமை அறிக. இவ்விரு பாடல் களும் ஒரு முடிபின.

உறுகவின்மெய்ப் புறம்பொலிய
ஒளிநுசுப்பை முலைவருத்த
முறுவல்புறம் அலராத
முகிண்முத்த நகையென்னும்
நறுமுகைமென் கொடிமருங்குல்
நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை
மறுவில்குலக் கொழுந்தினுக்கு
மணப்பருவம் வந்தணைய.

[ 15]


பொருந்திய அழகு, புற உடம்பில் மலர்ந்து பொலிந்திட வளர்ந்து, ஒளியுடைய இடையை மார்பகங்கள் பளுவாகி வருத்திட, எப்பொழுதும் முறுவல் புறத்துத் தெரியாதவகை முத்துப் போல் முகிழ்த்த பற்கள், முல்லை அரும்பு மலர்வது போல் புன்முறுவல் செய்திட, பூங்கொடி போலும் இடையினையும் அழகிய கருங்கூந்தலை யும் மாந்தளிரின் வனப்புடைய செங்கையையும் உடையவளாய், வளர்ந்து வரும் மறுவிலாத அக்குலக் கொழுந்தாய அப்பெண்ணிற்குத் திருமணம் புரியும் பருவம் வந்து அணைந்திடலும்.
குறிப்புரை:

Go to top
திருமகட்கு மேல்விளங்குஞ்
செம்மணியின் தீபமெனும்
ஒருமகளை மண்ணுலகில்
ஓங்குகுல மரபினராய்க்
கருமிடற்று மறையவனார்
தமராய கழல்ஏயர்
பெருமகற்கு மகட்பேச
வந்தணைந்தார் பெருமுதியோர்.

[ 16]


திருமகளுக்கு மேலாக விளங்குகின்ற செவ்விய மணிவிளக்கின் ஒளி எனும்படியாய அரும்பேறுடைய அந்த ஒரு மகளாரை இம்மண்ணுலகில் மேலோங்கிய வேளாண் குலத்தில் தோன்றிய நன்மரபினராய், கரிய கழுத்தினையுடைய இறைவற்கு ஆளாய அடியவராய் உள்ள வீரக்கழல் அணிந்த ஏயர்கோன் கலிக் காம நாயனாருக்கு மணம் பேசும் பொருட்டாகப் பெருமுதியோர்கள் அங்கு வந்தார்கள்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

வந்தமூ தறிவோரை
மானக்கஞ் சாறனார்
முந்தைமுறை மையின்விரும்பி
மொழிந்தமணத் திறங்கேட்டே
எந்தமது மரபினுக்குத்
தகும்பரிசால் ஏயுமெனச்
சிந்தைமகிழ் வுறஉரைத்து
மணநேர்ந்து செலவிட்டார்.

[ 17]


இவ்வாறு மணம் பேசுதற்கென வந்த முதிய பெரியோரை, மானக்கஞ்சாற நாயனார், முன்னின்றவர்கள் பேணி வரும் அன்பின் முறைமையால் விரும்பி, அவர்கள் சொல்லிய மணத்தின் வரலாற்றைக் கேட்டு, இம் மண நிகழ்வு எங்களுடைய மரபிற்கு ஏற்ற முறையினால் பொருந்துவதாகின்றது என்று தமது மனம் மகிழ்வுறக் கூறித் திருமணத்திற்கு இசைவு கொடுத்து, அப்பெரியோரை வழியனுப்பினர்.

குறிப்புரை:

சென்றவருங் கஞ்சாறர்
மணமிசைந்த படிசெப்பக்
குன்றனைய புயத்தேயர்
கோனாரும் மிகவிரும்பி
நின்றநிலை மையினிரண்டு
திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல்வினை மங்கலநாள்
மதிநூல்வல் லவர்வகுத்தார்.

[ 18]


மீண்டுசென்ற அவர்களும், ஏயர்கோன் கலிக்காமனாரிடம் சென்று, மானக்கஞ்சாறர் திருமணத்திற்கு இசைவு கொண்டமையைக் கூற, மலைபோன்ற வலிய தோள்களையுடைய ஏயர்கோன் கலிக்காமரும் மிகவும் விரும்பி நின்ற நிலைமையில், இருதிறத்தார்க்கும் ஏற்பதொரு திருமண நாளை மிக்க மதிநுட்ப முடைய வல்லுநர்கள் வகுத்தார்கள்.
குறிப்புரை:

மங்கலமாம் செயல்விரும்பி
மகட்பயந்த வள்ளலார்
தங்குலநீள் சுற்றமெலாம்
தயங்குபெருங் களிசிறப்பப்
பொங்கியவெண் முளைப்பெய்து
பொலங்கலங்கள் இடைநெருங்கக்
கொங்கலர்தண் பொழில்மூதூர்
வதுவைமுகங் கோடித்தார்.

[ 19]


மங்கலம் நிறைந்த அத்திருமணச் செயலை விரும்பிப் பெண்ணைப் பெற்ற வள்ளலாராகிய மானக்கஞ்சாறர், தம் குலத்திலுள்ள சுற்றத்தவர் எல்லோரும் பெருமகிழ்ச்சி எய்த, பொங்கிய வெண்முளையாய பாலிகை இட்டு வைத்த அழகிய பொற்பாத்திரங்கள் எங்கும் இடை இடை நெருங்கிட, நறுமணம் மிகுந்த மலர்தரும் குளிர்ந்த சோலையினை உடைய அம்முதிய ஊராகும் கஞ்சாறூரைத் திருமணப்பொலிவிற்கு ஏற்ப அழகு செய்தார்.

குறிப்புரை: வதுவைமுகம் கோடித்தல் - மனையகத்தில் திருமணம் நிகழ்வதற்கேற்ப, முன்புறத்திருக்கும் முகப்பை அணிசெய்து, மண மனையாகப் பார்வை பெறச் செய்தல்.

கஞ்சாறர் மகட்கொடுப்பக்
கைப்பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்ப்பெருமை
ஏயர்குலப் பெருமானும்
தஞ்சால்பு நிறைசுற்றந்
தலைநிறைய முரசியம்ப
மஞ்சாலும் மலர்ச்சோலைக்
கஞ்சாற்றின் மருங்கணைய.

[ 20]


மானக் கஞ்சாறர் தம் மகளாரை மகட் கொடையாகக் கொடுப்ப, அப்பெண்மகளைக் கைப்பிடிக்க வருகின்ற குறைவிலாத புகழையும், பெருமையையும் உடைய ஏயர்குலத்தி னராய கலிக்காமரும், அவர்தம் சால்பு நிறைந்த சுற்றத்தார் அனை வரும் திரண்டுவர, இன்னியங்கள் முழங்கிட, மேகங்கள் வந்து உறையும் மலர்ச்சோலையையுடைய கஞ்சாறூரின் அருகில்வர.

குறிப்புரை:

Go to top
வள்ளலார் மணமவ்வூர்
மருங்கணையா முன்மலர்க்கண்
ஒள்ளிழையைப் பயந்தார்தம்
திருமனையில் ஒருவழியே
தெள்ளுதிரை நீருலகம்
உய்வதற்கு மற்றவர்தம்
உள்ளநிலைப் பொருளாய
உம்பர்பிரான் தாமணைவார்.

[ 21]


வள்ளலாராய ஏயர்கோன் கலிக்காமனாரின் திருமண எழுச்சி கஞ்சாறூரின் அருகில் வந்தணைவதற்கு முன்பாக, பெண்ணினைப் பெற்ற மானக்கஞ்சாறனாரின் திருமனையிடத்துப் பிறிதொரு வழியாக, தெள்ளிய திரையுடைய கடல்சூழ்ந்த இவ்வுலகம் உய்வதற்காக, மானக்கஞ்சாற நாயனாரின் உள்ளத்து நிலையாய பொருளாக விளங்கும் சிவபெருமான் அங்கு வருவாராய்.

குறிப்புரை: மணம் காணவரும் மக்கள் வரும் வழியில் அன்றிப் பிறி தொரு வழியாக வந்தார் என்பார். 'ஒருவழியே' என்றார். பொறிகள் தத்தம் புலன்வழிச் செல்லாது சிவமாம் தன்மைப் பெருவாழ்வு பெறும் ஒருவழியே வந்தார் என்பார், 'ஒருவழியே' என்றார் என்றலும் ஒன்று.

முண்டநிறை நெற்றியின்மேல்
முண்டித்த திருமுடியில்
கொண்டசிகை முச்சியின்கண்
கோத்தணிந்த எற்புமணி
பண்டொருவன் உடலங்கம்
பரித்தநாள் அதுகடைந்த
வெண்தரளம் எனக்காதின்
மிசையசையுங் குண்டலமும்.

[ 22]


மூன்று கீற்றாகத் திருநீற்றை அணிந்த நெற்றி யின்மேல், மழித்த திருமுடியில், ஓரிடம் மட்டும் உள்ள மயிரை எடுத்து உச்சி மீது கட்டிய குடுமியில் கோத்தணிந்த எலும்பின் மணியும், முன்பு ஒரு காலத்துத் திருமாலின் எற்புக் கூட்டினைத் தாங்கிய பொழுது, அவ் வெலும்புக் கூட்டைக் கடைந்து எடுத்த வெண்முத்துக்கள் என விளங்கும் திருக்காதில் அணிந்து அசைகின்ற குண்டலங்களும்,

குறிப்புரை: முண்டித்த - மழித்த. வெண்தரளம் என அசையும் குண்டலமும் எனக் கூட்டுக. பரித்த - தாங்கிய. முச்சி - நுனி, குடுமியின் நுனி.

அவ்வென்பின் ஒளிமணிகோத்
தணிந்ததிருத் தாழ்வடமும்
பைவன்பேர் அரவொழியத்
தோளிலிடும் பட்டிகையும்
மைவந்த நிறக்கேச
வடப்பூணு நூலும்மனச்
செவ்வன்பர் பவமாற்றுந்
திருநீற்றுப் பொக்கணமும்.

[ 23]


அத்திருமாலின் எலும்பில் கடைந்தெடுத்த ஒளியையுடைய மணிகளைக் கோத்து அணிந்த திருவுடைய நீண்ட பெருமாலையும், நச்சுப்பையையுடைய கொடிய நாகத்தை நீக்கிய திருத்தோளில் அணிந்த யோகப்பட்டையும், மைபோலும் கருநிறம் வாய்ந்த அழகிய மயிர்க் கயிறாய பூணூலும், செவ்விய மணமுடைய அன்பர்களது பாவங்களை மாற்றுகின்ற திருநீற்றுப்பையும்,

குறிப்புரை: பை - நச்சுப்பை. வன் - வலிய. மை வந்த நிறம் - கரிய நிறம். திருநீற்றுப் பொக்கணம் - திருநீற்றுப்பை.

ஒருமுன்கைத் தனிமணிகோத்
தணிந்தவொளிர் சூத்திரமும்
அருமறைநூற் கோவணத்தின்
மிசையசையும் திருவுடையும்
இருநிலத்தின் மிசைதோய்ந்த
எழுதரிய திருவடியும்
திருவடியில் திருப்பஞ்ச
முத்திரையுந் திகழ்ந்திலங்க.

[ 24]


ஒருகையின் முன்கையில், தனியாய ஓர் எலும்பு மணியைக் கோத்து அணிந்து ஒளிர்கின்ற காப்பும், அரிய மறைகளாய கோவண ஆடையின் மேல் அசைகின்ற திருவுடையும், இந்நிலவுலகில் தோயும்படி நடந்தருளிவரும் எழுதரிய திருவடியும், திருமேனியில் திகழ்ந்து விளங்கும் திருவுடைய ஐங்குறிகளும் (பஞ்சமுத்திரைகளும்) மிக விளங்க,

குறிப்புரை: சூத்திரம் - எலும்பு கோக்கப்பட்ட கயிறு; காப்பு. ஐங்குறிகள்: தாமரை, சங்கு, மீன், சக்கரம், தண்டம் என்பன. இவை ஞானியர்களின் திருமேனியில் வரைக் கீற்றுகளாக அமைந்திருக்கும் என்பர். இனித் தண்டு, வாள், சங்கு, சக்கரம், வில் எனும் ஐங்கருவிகள் என்றும் உரைப்பர். இவை திருமேனியிலன்றி திருவடியிலேயே அமைந்திருக்கும் என்றும் கூறுப. இவ்வாறுரைப்பார் 'திருவடியில்' எனப் பாடங்கொள்வர்.

பொடிமூடு தழலென்னத்
திருமேனி தனிற்பொலிந்த
படிநீடு திருநீற்றின்
பரப்பணிந்த பான்மையராய்க்
கொடிநீடு மறுகணைந்து
தம்முடைய குளிர்கமலத்
தடிநீடும் மனத்தன்பர்
தம்மனையி னகம்புகுந்தார்.

[ 25]


சாம்பற்பொடியால் மூடப்பெற்ற நெருப்பைப் போல, திருநீற்றின் ஒளியமைந்த திருமேனியையுடையராய்க் கொடி கள் நெடுகிலும் நாட்டப் பெற்ற கஞ்சாறூர் வீதியினூடாக வந்து, தம்முடைய குளிர்ந்த தாமரை போலும் திருவடிகளையே நீளநினையும் மனமுடைய அன்பராம் மானக்கஞ்சாறரது திருமனையின் உள்ளே புகுந்தார்.
குறிப்புரை: பொடி - சாம்பல். மேல் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
வந்தணைந்த மாவிரத
முனிவரைக்கண் டெதிரெழுந்து
சிந்தைகளி கூர்ந்துமகிழ்
சிறந்தபெருந் தொண்டனார்
எந்தைபிரான் புரிதவத்தோர்
இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன்என்
றுருகியஅன் பொடுபணிந்தார்.

[ 26]


இவ்வாறாய கோலத்துடன் வந்தணைந்த மாவிரத முனிவரைக் கண்டு, எதிர் எழுந்து, சிந்தை மலர்ந்து, களி கூர்ந்த சிறந்த பெருந் தொண்டராய மானக்கஞ்சாறனார், 'எந்தையாம் பெருமானைப் பேணிடும் பெரும் முனிவர் ஒருவர் இவ்விடத்தே இன்று எழுந்தருளி வர அடியேன் உய்ந்து வாழ்ந்தேன்,' என்று உள்ளம் உருகிய அன்புடன் எம்பெருமானைப் பணிந்தார்.
குறிப்புரை:

நற்றவராம் பெருமானார்
நலமிகும்அன் பரைநோக்கி
உற்றசெயல் மங்கலமிங்
கொழுகுவதென் எனஅடியேன்
பெற்றதொரு பெண்கொடிதன்
வதுவையெனப் பெருந்தவரும்
மற்றுமக்குச் சோபனம்ஆ
குவதென்று வாய்மொழிந்தார்.

[ 27]


நல்ல தவக்கோலத்துடன் வந்த பெருமானும், மிகு நலம் பெற்ற மானக்கஞ்சாறனாரைப் பார்த்து, 'இங்கு நடைபெறும் மங்கலச் செயல்களுக்குக் காரணம் என்ன?' என வினவ, அவரும், 'அடியேன் பெற்றதொரு பெண்கொடியின் திருமணம் இன்று நிகழ் கிறது' எனலும், அது கேட்ட மாவிரதியாரும், 'உமக்கு மங்கலம் உண்டாகட்டும்,' என ஆசி வழங்கியருளினார்.
குறிப்புரை: சோபனம் - மங்கலம்: நன்மை.

ஞானச்செய் தவரடிமேற்
பணிந்துமனை யகம்நண்ணி
மானக்கஞ் சாறனார்
மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தல்
திருமகளைக் கொண்டணைந்து
பானற்கந் தரமறைத்து
வருமவரைப் பணிவித்தார்.

[ 28]


இவ்வாறு அருளிய ஞானச்சுடராய் விளங்கி யருளும் தவமுனிவரின் திருவடிகளில் வணங்கித், தம் மனையில் சென்று, அங்கு மணக் கோலத்துடன் இருக்கும் தேன் சொட்டும் மலர்மாலை சூடிய கூந்தலையுடைய திருவுடைய தம் மகளாரை அழைத்துக் கொண்டு அம்முனிவர் பெருமான் இடமாக வந்து, நீலகண்டத்தை மறைத்து வந்த மாவிரதியாராய பெருமானாரைப் பணிவித்தார்.
குறிப்புரை:

தஞ்சரணத் திடைப்பணிந்து
தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன்
மஞ்சுதழைத் தெனவளர்ந்த
மலர்க்கூந்தற் புறம்நோக்கி
அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த்
தணங்கிவள்தன் மயிர்நமக்குப்
பஞ்சவடிக் காமென்றார்
பரவஅடித் தலங்கொடுப்பார்.

[ 29]


தம்மைப் பணிவார்க்குத் தம் திருவடிகளைக் கொடுத்து ஆட்கொள்ளும் பெருமான், தம் திருவடிகளைப் பணிந்து எழுந்த மடம் எனும் குணம் நிறைந்த பெண்ணின், மேகம் தளிர்த்துத் தழைத்தது என நீண்டு வளர்ந்த மலர் சூடிய கூந்தலின் புறத் தோற்றத்தைப் பார்த்து, பின்னர்த் தம்மை வணங்கியவாறு நிற்கும் மெய்த்தொண்டராய மானக்கஞ்சாறரை நோக்கி, 'இப்பேரழகுடைய இவளது கூந்தல் நமக்குப் பூணூலாய வடத்தினுக்கு (பஞ்சவடிக்கு) உதவும்' என்றார், தம்மைப் பரவி வருவாருக்குத் தம் திருவடிப் பேற்றை வழங்கியருளும் தன்மையினராய பெருமான்.
குறிப்புரை: பஞ்சவடம்: பஞ்ச - அகலமான; வடம் - கயிறு. மயிராய கயிற்றால் இயன்ற நீண்ட வடம். மாவிரதியர் இதனை அணியும் இயல்பினர். 'சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை'(தி. 6 ப. 50 பா. 2) எனவரும் அப்பர் திருவாக்கும் காண்க.

அருள்செய்த மொழிகேளா
அடற்சுரிகை தனையுருவிப்
பொருள்செய்தா மெனப்பெற்றேன்
எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல்
அடியிலரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார்
மலர்க்கரத்தி னிடைநீட்ட.

[ 30]


இவ்வாறு அவர் அருள் செய்ததைக் கேட்ட மானக் கஞ்சாறர், உடனே, வலிமைமிகுந்த தனது சுழல்வாளை உறையி னின்றும் உருவி எடுத்து, 'நான் இன்று கிடைத்தற்கரிய பெரும் பொருள் பெற்றேன்', எனும் நினைவு கொண்டு, பூங்கொடி போலும் தம் மகளா ரின் இருள் நிறைந்த கருங் கூந்தலைப் பிடரி அளவுடன் அடியில் அரிந்து, கையில் எடுத்துத் தமது எதிர்நின்ற மயக்கம் செய்திடும் பிறப்பினை அறுத்துச் சீர்மைபெற வைத்திடும் மாவிரதியாரின் மலர்க்கரத்தில் கொடுத்திட
குறிப்புரை:

Go to top
வாங்குவார் போல்நின்ற
மறைப்பொருளாம் அவர்மறைந்து
பாங்கின்மலை வல்லியுடன்
பழையமழ விடையேறி
ஓங்கியவிண் மிசைவந்தார்
ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத்
தூங்கியபொன் மலர்மாரி
தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார்.

[ 31]


அதனை வாங்குவார் போல்நின்ற மறையின் பொருளாய பெருமானார் மறைந்தருளி, தம் இடமருங்கில் பார்வதி அம்மையாருடன், மிகவும் பழமையாய ஆனேற்றில் ஓங்கிய வானத்தின்மீது எழுந்தருளி வந்தார். ஒளியுடைய வானமும், நிலமும் கற்பகமலர் மழை பொழிந்தது. தொண்டராய மானக்கஞ்சாறர் அத்திருவுருவைக் கண்குளிரக் கண்டு தொழுது நிலமுறப் பணிந்தார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

விழுந்தெழுந்து மெய்ம்மறந்த
மெய்யன்பர் தமக்குமதிக்
கொழுந்தலைய விழுங்கங்கை
குதித்தசடைக் கூத்தனார்
எழும்பரிவு நம்பக்கல்
உனக்கிருந்த பரிசிந்தச்
செழும்புவனங் களிலேறச்
செய்தோமென் றருள்செய்தார்.

[ 32]


வீழ்ந்து எழுந்து மெய்ம்மறந்து நிற்கும் மெய்த்தொண்டருக்கு, இளம்பிறை அச்சத்தால் அலைந்திட, வந்து வீழ்ந்திடும் கங்கையாறு பொங்கி நிற்கும் திருச்சடையையுடைய கூத்தனார், 'உமக்கு எம்பால் எழுகின்ற அன்பின் பெருமையைச் செழித்து நிற்கும் உலகெங்கும் தெரிந்திடுமாறு செய்தோம்' என்று மொழிந்து அருள் செய்தார்.
குறிப்புரை:

மருங்குபெருங் கணநாதர்
போற்றிசைப்ப வானவர்கள்
நெருங்கவிடை மேல்கொண்டு
நின்றவர்முன் நின்றவர்தாம்
ஒருங்கியநெஞ் சொடுகரங்கள்
உச்சியின்மேற் குவித்தையர்
பெருங்கருணைத் திறம்போற்றும்
பெரும்பேறு நேர்பெற்றார்.

[ 33]


அருகிருந்த கணநாதர்கள் போற்றி இசைத்திடவும், தேவர்கள் வணங்கி நெருங்கவும், ஆனேற்றின்மீது எழுந்தருளிய பெருமான்முன் நின்றவராய மானக்கஞ்சாறர் தாமும், ஒருநெறிய மனத்துடன் கைகளை உச்சியின் மேல் குவித்துப் பெருமானின் பெருங் கருணைத் திறத்தை நேராகக் கண்டு போற்றும் பெரும்பேற்றைப் பெற்றார்.
குறிப்புரை:

தொண்டனார் தமக்கருளிச்
சூழ்ந்திமையோர் துதிசெய்ய
இண்டைவார் சடைமுடியார்
எழுந்தருளிப் போயினார்
வண்டுவார் குழற்கொடியைக்
கைப்பிடிக்க மணக்கோலங்
கண்டவர்கள் கண்களிப்பக்
கலிக்காம னார்புகுந்தார்.

[ 34]


தொண்டராய மானக்கஞ்சாற நாயனாருக்கு இவ்வகையால் அருள் புரிந்தபின், தேவர்கள் யாவரும் சூழ்ந்து போற்ற, இண்டை மாலையை அணிந்த சடைமுடியுடைய பெருமானார் மறைந்தருளினார். வண்டுகள் மொய்த்திடும் மலர்க் கூந்தலுடன் அழகிய பூங்கொடிபோல் விளங்கும் மணமகளாரை மணக்க வருகின்ற மணக் கோலத்தினைக் கண்டவர்கள் கண்களிக்கும்படியாக ஏயர் கோன் கலிக்காமரும் மானக்கஞ்சாறர் மனையின் உட்புகுந்தார்.
குறிப்புரை:

வந்தணைந்த ஏயர்குல
மன்னவனார் மற்றந்தச்
சிந்தைநினை வரியசெயல்
செறிந்தவர்பால் கேட்டருளிப்
புந்தியினில் மிகவுவந்து
புனிதனார் அருள்போற்றிச்
சிந்தைதளர்ந் தருள்செய்த
திருவாக்கின் திறங்கேட்டு.

[ 35]


அங்கு வந்த ஏயர்குல மன்னரான கலிக்காமனார், சிந்தையால் நினைவரிய செயலினை அங்கு நின்றார்கள்பால் கேட்டருளி, மனத்தில் மிகவும் மகிழ்வுற்று, புனிதராய பெருமானின் திருவருளினைப் போற்றிசெய்து, அத்தகைய திருவருட்பேறுடைய மகளாரைத் தாம் திருமணம் புணர்தற்குத் தமது மனம் தளர்வுற்ற பொழுது, பெருமான் அருள் செய்த நல்வாக்கின் திறத்தினைக் கேட்டு,சிந்தை தளர்ந்து.
குறிப்புரை: (1) இச்செயல் மணம் நிகழ்ந்தபின் நிகழ்ந்திருப் பின் தமக்கும் அந்நிகழ்வைப் போற்றி வணங்கும் பேறு கிடைத்திருக்குமே எனும் கருத்தால் மனந்தளர்ந்து என்றும், (2) பெருமானால் கூந்தல் விரும்பிக் கொள்ளப்பட்ட பெண்ணை எவ்வாறு மணப்பது என்று மனந்தளர்ந்து என்றும், (3) முண்டிதமான பெண்ணை எவ்வாறு மணப்பதென மனந்தளர்ந்து என்றும், (4) மனைவியின் மயிர் அரியுண்டமைக்கு மனந்தளர்ந்து என்றும், (5) பேரடியாராகிய மானக்கஞ்சாறனார் தமது மணத்துக்கு இல்லாமல் சிவபெருமானை அணைந்தது பற்றியும் அதனால் சுற்றத்தார் வருந்துதல் பற்றியும் மனந்தளர்ந்து என்றும், மற்றும் பலவாறும் உரை கூறுவாருமுளர். இவற்றுள் முன்னையதொன்றே கருதற்குரியதாம். ஏனையவை எண்ணற்குரியனவல்ல.

Go to top
மனந்தளரும் இடர்நீங்கி
வானவர்நா யகரருளால்
புனைந்தமலர்க் குழல்பெற்ற
பூங்கொடியை மணம்புணர்ந்து
தனம்பொழிந்து பெருவதுவை
உலகெலாந் தலைசிறப்ப
இனம்பெருகத் தம்முடைய
எயின்மூதூர் சென்றணைந்தார்.

[ 36]


மனந்தளர்ந்த நிலையினின்றும் நீங்கியவராய், தேவர்களின் தலைவரான இறைவனின் இன்னருளால், மீளவும் பழமைபோல் வளரப்பெற்ற கூந்தலையுடைய பூங்கொடியாய அப்பெண்ணைத் திருமணம் செய்து, யாவர்க்கும் பொருள் வழங்கி, அனைவரும் இன்புறும்படியாகப் பெரிய இத்திருமண நிகழ்வை உலகெலாம் போற்ற, தம் சுற்றத்தார் பலரும் பெருகிச் சூழ்ந்து வர மதிலுடைய தன்முதிய நகரம் சென்று சேர்வுற்றார்.
குறிப்புரை: மூதூர் - திருப்பெருமங்கலம் என்னும் ஊர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஒருமகள் கூந்தல் தன்னை
வதுவைநாள் ஒருவர்க் கீந்த
பெருமையார் தன்மை போற்றும்
பெருமைஎன் அளவிற் றாமே
மருவிய கமரிற் புக்க
மாவடு விடேலென் னோசை
உரிமையால் கேட்க வல்லார்
திறமினி யுரைக்க லுற்றேன்.

[ 37]


தம் ஒரே ஒரு மகளின் கூந்தலைத் திருமண நாளன்று ஒப்பற்ற மாவிரதியாருக்கு அரிந்து கொடுத்த பெருமை யுடைய மானக்கஞ்சாற நாயனாரின் பெருமையைப் போற்றுதல் என் அளவில் இயலுவதாகுமோ? ஆகாது. பொருந்திய நில வெடிப்பிலே சிதறுண்டு சிந்திய மாவடுவைக் கடித்திடும் போது கேட்கப்படும் 'விடேல்' என்னும் ஓசையை அன்பு மீதூர்ந்த உரிமையால் கேட்க வல்லாராய அரிவாட்டாய நாயனாரின் திறம் பற்றி இனிச் சொல்ல லுற்றேன்.
குறிப்புரை:


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song